There were 1,735 press releases posted in the last 24 hours and 401,175 in the last 365 days.

பிரித்தானியப் பிரதமருக்கு வேண்டுகோள்: சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் – சிறிலங்காவை ஐநா பொதுப் பேரவையிக்கு அனுப்புக!

“சிறிலங்கா அரசாங்கம் கேட்கும் கால நீட்டிப்புடன் கூடிய புதிய தீர்மானத்தை பிரித்தானியா முன்மொழியவோ ஆதரிக்கவோ கூடாது.”

COLOMBO, SRI LANKA, February 24, 2017 /EINPresswire.com/ --

இந்த இணைப்பிற்குச் சென்று, பிரித்தானியப் பிரதமருக்கான வேண்டுகோளில் ஒப்பமிடுங்கள்:

https://www.change.org/p/the-right-honorable-theresa-may-prime-minister-of-the-united-kingdom-enough-is-enough-un-human-rights-council-now-refer-sri-lanka-to-the-un-general-assembly?recruiter=14863130&utm_source=share_petition&utm_medium=copylink

ENGLISH: http://world.einnews.com/pr_news/367972851/appeal-to-uk-prime-minister-sri-lanka-war-crimes-refer-sri-lanka-to-un-general-assembly

சிறிலங்கா தொடர்பான ஐநா உள்ளக ஆய்வறிக்கையின் படி, 2009ஆம் ஆண்டு ஆறு மாதக் காலத்தில் கிட்டத்தட்ட 70 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்; தமிழ்ப் பெண்கள் சிறிலங்கா பாதுகாப்புப் படைகளின் பாலியல் வன்தாக்கிற்கும் வல்லுறவுக்கும் ஆளானார்கள்; சிறிலங்கா பாதுகாப்புப் படையினர் போர்க்குற்றங்களும் மானிடத்துக்கு எதிரான குற்றங்களும் புரிந்துள்ளனர்.

இந்தச் சிக்கல்கள் குறித்து, ஏழாண்டு முன்பு போர் முடிந்ததிலிருந்து, ஐநா மனித உரிமை மன்றத்தில் சிறிலங்கா தொடர்பான பல தீர்மானங்கள் இயற்றப்பட்டுள்ளன. ஐநா தீர்மானங்களையும், அந்நாடே அமைத்த படிப்பினைகள்=நல்லிணக்க ஆணையத்தின் அறிக்கையையும் செயலாக்க ஊக்கமளிக்கும் விதத்தில் சிறிலங்காவுக்கு நல்லெண்ண அடிப்படையில் கால அவகாசமும் இட வெளியும் தரப்பட்டன. ஆனால் முந்தைய அரசாங்கமும் சரி, இப்போதைய அரசாங்கமும் சரி, உருத்திட்டமான நடவடிக்கைகள் ஏதும் மேற்கொள்ளவில்லை. சிறிலங்கா அரசாங்கம் எவ்வித நியாயமும் இல்லாமல் வேண்டுமென்றே காலந்தாழ்த்தி வருகிறது. செயல் புரிவதற்கான அரசியல் மனத்திட்பம் ஏதுமற்றதாக உள்ளது.

பிரித்தானிய நாடு 01/10/2015ஆம் நாள் ஐநா மனித உரிமை மன்றத்தின் சிறிலங்கா தொடர்பான 30/1 தீர்மானத்தைக் கூட்டாக முன்மொழிந்த நாடுகளில் ஒன்று. சிறிலங்கா பாதுகாப்புப் படையினரால் தமிழர்கள் பெருந்திரளாகப் படுகொலை செய்யப்பட்டதற்கும், தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்தாக்குக்கும் வல்லுறவுக்கும் ஆளாக்கப்பட்டதற்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்வதில் பிரித்தானியாவுக்கு உயிர்நாடியான பங்குள்ளது. சிறிலங்கா அரசாங்கம் கேட்டுக் கொண்டபடி கால நீட்டிப்புடன் கூடிய புதிய தீர்மானத்தை பிரித்தானியா முன்மொழியவோ ஆதரிக்கவோ கூடாது. சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த வேண்டுகோளின் நோக்கம் சிறிலங்கா மீதான கவனத்திலிருந்து அனைத்துலகச் சமுதாயத்தின் கனத்தை திருப்புவதும், தன மீறல்களைத் தொடர்வதுமே.

பிரித்தானியப் பிரதமர் மாண்புமிகு தெரேசா மே 2017 மார்ச்சு மாதம் ஐநா மனித உரிமை மன்றத்தில் உரியன செய்து, வட கொரியாவைப் போல் சிறிலங்காவையும் ஐநா பொதுப் பேரவையின் பார்வைக்கு அனுப்ப வழிகோலும்படி இவ்விண்ணப்பத்தின் வாயிலாக வேண்டுகிறோம்.

வேண்டுகோள்கள்:

1) ஐநா மனித உரிமை மன்றம் பொறுப்புக்கூறல் குறித்து ஒருமனதாக இயற்றிய 30/1 தீர்மானத்தில் சிறிலங்கா அரசாங்கம் கொடுத்த உறுதியைக் காப்பாற்றுவதற்கான 2017 மார்ச்சு காலக்கெடுவைக் கடந்து எவ்விதக் காலநீட்டிப்பும் தர வேண்டாம் என உங்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். இந்தத் தீர்மானத்தை சிறிலங்கா தானே தன்னார்வமாய்ப் பிறருடன் சேர்ந்து கூட்டாக முன்மொழிந்ததோடு, தீர்மானத்தின் கடப்பாடுகளை 2017 மார்ச்சு மாதத்துக்குள் முழுமையாக நிறைவேற்றவும் உறுதியளித்தது. கால நீட்டிப்புகளும், சலுகைக் காலங்களும் முன்பே தரப்பட்ட போதிலும் எந்த முனையிலும் முன்னேற்றம் என்பதே இல்லை.

2) தமிழர்களைக் காக்கவும், அவர்களுக்கு நீதியும் பாதுகாப்பும் வழங்கவும் ஒரே வழி -- வட கொரியாவின் மானிட விரோதக் குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யக் கடைப்பிடித்த நடைமுறை போல் -- சிறிலங்காவை ஐநா பொதுப் பேரவையின் பார்வைக்கு அனுப்புவதும், சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்புமாறு அல்லது சிறிலங்கா குறித்துச் சிறப்பு அனைத்துலகக் குற்றவியல் தீர்ப்பாயம் அமைக்குமாறு பரிந்துரை செய்வதும்தான்.

தமிழர்களின் பாதுகாப்புக்கு ஆபத்து:

எவ்வகையில் கால நீட்டிப்பு வழங்கினாலும், சிறிலங்கா அரசாங்கம் எவ்வித அச்சமும் இல்லாமல் தமிழர்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் செய்யத் துணிவும் ஊக்கமும் அளிப்பதாகி விடும், இதனால் தமிழர்களின் பாதுகாப்பு ஆபத்துக்குள்ளாகும் என்று அஞ்சுகிறோம். பெருந்திரளான படுகொலைகளும் பாலியல் வன்செயலும் புரிந்த பல்லாயிரம் சிறிலங்கா பாதுகாப்புப் படையினர் இன்றளவும் தமிழ்ப் பகுதிகளில் நிறுத்தப்பட்டு, பாதிப்புற்றோரின் நடுவில் வாழ்ந்து வருகின்றனர். தமிழர்களுக்கு எதிராக இப்போது நிகழ்ந்து வரும் உரிமைமீறல்கள் குறித்துப் பல செய்திகள் வந்துள்ளன. சித்திரவதை, கொடிய, மனிதத் தன்மையற்ற அல்லது இழிவான நடத்துமுறை அல்லது தண்டனைமுறை பற்றிய ஐநா சிறப்பு அறிக்கையாளர் திரு யுவான் மெண்டிஸ் அண்மையில் தந்துள்ள அறிக்கையைச் சான்றாகக் குறிப்பிடலாம்.

பின்னணி:

போர்க் குற்றங்கள் மீது வழக்குத் தொடுக்க ஒரு பன்னாட்டுப் பொறிமுறை அமைக்கப்பட வேண்டும் என்பது 2009ஆம் ஆண்டு போர் முடிந்ததிலிருந்தே தமிழர்களின் மனத்தில் தகிக்கும் பேராவலும் பெருவிருப்புமாக இருந்து வருகிறது. ஐநா மனித உரிமை மன்றம் 2015ஆம் ஆண்டு இயற்றிய தீர்மானம் தமிழர்தம் ஆவல்களும் விருப்பங்களும் நிறைவு செய்யப்படும் என்ற நம்பிக்கையின் மெல்லொளி காட்டுவது போல் அமைந்தது.

ஆனால் சிறிலங்கா அரசாங்கமும் அதன் தலைவர்களும் தாங்களே தன்னார்வமாகப் பிறருடன் சேர்ந்து கூட்டாக முன்மொழிந்த தீர்மானத்தில் கொடுத்த உறுதிகளிலிருந்து பின்வாங்கி வார்த்தை மீறும் முயற்சிகள் செய்யக் கண்டு நாங்கள் கலக்கமும் கவலையும் அடைந்தோம். ஜெனிவா தீர்மானங்கள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் கடைப்பிடிக்கும் உத்திகள் குறித்து எவ்வித ஐயத்துக்கும் இடமில்லை என்பது கண்கூடு. அனைத்துலகச் சமுதாயத்தைத் திரும்பத் திரும்ப ஏமாற்றவும் வஞ்சிக்கவுமான முயற்சியில் ஈடுபட்டுள்ள சிறிலங்கா நீதிச் செயல்வழியை மேலும் காலந்தாழ்த்தவும், இவ்வாறு 2009 முள்ளிவாய்க்கால் பெருந்திரள் படுகொலைகளுக்கும் பாலியல் வன்முறைக்குமான பொறுப்புக்கூறலிலிருந்து தப்பவும் முயல்கிறது. இந்தப் படுகொலையில் ஆறு மாதக் காலத்தில் கிட்டத்தட்ட 70,000 தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்பது ஐநா உள்ளக ஆய்வறிக்கையின் கணிப்பு.

ஜெனிவா தீர்மானத்தைக் கூட்டாக முன்மொழிந்து, போர்க் குற்றங்களை விசாரிக்க அயல்நாட்டு, உள்நாட்டுச் சட்டவாளர்கள் கொண்ட நீதிமன்றம் அமைக்க ஒப்புக் கொண்ட பின் சிறிலங்காத் தலைவர்கள் அத்தீர்மானத்தின் எழுத்துக்கும் கருத்துக்கும் முரணாகச் செயல்பட்டு வருகிறார்கள்; ஐநா மனித உரிமை மன்றச் செயல்வழியைச் செல்லாமலமலடித்து முறியடிப்பதே அவர்களின் தந்திர நகர்வுகளுக்குள்ள நோக்கம்.

சிறிலங்கா ஐநா மனித உரிமை மன்றத்துக்கு 2015ஆம் ஆண்டு தன்னார்வமாகக் கொடுத்த உறுதிகளில் அநேகமாக எதையும் நிறைவேற்றவில்லை என்பதால், 2017 மார்ச்சுக்கு மேல் எவ்வகைக் கால நீட்டிப்புத் தந்தாலும் அது தமிழர்களுக்கு எதிராகப் புரிந்த போர்க் குற்றங்களுக்கும் மானிட விரோதக் குற்றங்களுக்கும் எவ்விதப் பொறுப்புக்கூறலும் இல்லை என்பதில் போய் முடியும்.

அரசியல் மனத்திட்பமின்மை:

எத்தனை ஆண்டுகள் கால நீட்டிப்புத் தந்தாலும் பயனேதும் விளையாது. ஏனென்றால் தமிழர்களுக்கு எதிராக அப்பட்டமான உரிமை மீறல் செய்தவர்களை அக்குற்றங்களுக்குப் பொறுப்பாக்கும் அரசியல் மனத் திட்பமேதும் அடுத்தடுத்த சிறிலங்கா ஆட்சியாளர்களுக்கு இல்லை.

அரசாங்கத் தலைவர்களின் குட்டிக்கரணம்:

தமிழர்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நிகழ்த்தப்பட்ட போது தளபதியாகச் செயல்பட்டுப் படையினருக்குக் கட்டளைகள் பிறப்பித்த ஜெனரல் சரத் பொன்சேகாவை இப்போதைய சிறிலங்கா அரசாங்கம் தனது அமைச்சரவையில் சேர்த்து, அவருக்கு உயர்ந்தபட்ச படைத்துறை விருதாகிய ஃபீல்டு மார்சல் பட்டமும் கொடுத்திருப்பது ஐநா மனித உரிமை மன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.

அதிபர் சிறிசேனாவும் தலைமையமைச்சர் விக்கிரமசிங்காவும் அவர்தம் அமைச்சர் பெருமக்களும் தனித்தனியாகவும் ஒன்றாகச் சேர்ந்தும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில், அரசுக்குச் சொந்தமான ஊடகங்களுக்கு அளித்த செவ்விகளிலும் பொது மேடைகளிலிருந்து ஆற்றிய உரைகளிலும், ஐநா மனித உரிமை மன்றத் தீர்மானத்தின் முதன்மைக் கூறுகளை மறுதலித்துள்ளனர்.

அரியணைக்குப் பின்னிருக்கும் ஆற்றல்களில் ஒருவரான முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா அண்மையில் செய்தித்தாளுக்கு அளித்த ஒரு பேட்டியில் அரசாங்கத்தின் திட்டத்தை அனிச்சையாகப் போட்டு உடைத்து விட்டார். புதிய அரசமைப்புச் சட்டம் இயற்றப்படுவதோடும், காணாமற்போனோர் அலுவலகம் அமைப்பதோடும் “போர்க் குற்றங்களை விசாரிக்க நீதிமன்றங்கள் அமைக்கத் தேவையே இருக்காது” என்று அப்பட்டமாகச் சொல்லியிருக்கிறார். (டெய்லி மிரர், 2017 பிப்ரவரி 2).

பிற உரிமைமீறல் நாடுகள் பெருந்திரள் படுகொலைகளும் பாலியல் வன்செயலும் புரியத் துணிவூட்டும்:

சிறிலங்காவுக்குக் காலநீட்டிப்புத் தருவது உலகெங்கும் மனித உரிமை மீறலில் ஈடுபடும் பிற நாடுகள் அச்சமே இல்லாமல் பெருந்திரள் படுகொலைகளும் பாலியல் வன்செயலும் புரிந்து விட்டு, சிறிலங்காவின் உதாரணத்தைப் பின்பற்றி ஐநா மனித உரிமை மன்றத் தீர்மானங்களை ஏய்ப்பதற்குத் துணிவூட்டுவதாகவும் அமைந்து விடும்.

பொறுப்புக்கூறலுக்கு வட கொரிய எடுத்துக்காட்டு:

வடகொரியாவை எடுத்துக் கொண்டால், அந்நாட்டின் மீதான குற்றச்சாட்டுகள் மானிட விரோதக் குற்றங்களுக்குத்தான். ஆனால் சிறிலங்கா மீதான குற்றச்சாட்டு போர்க்குற்றங்கள், மானிட விரோதக் குற்றங்கள் ஆகிய இருவகைக் குற்றங்களும் புரிந்தது என்பதாகும்.

வட கொரியாவுடன் ஒப்பிடுமிடத்து சிறிலங்காவுக்கு எதிரான ஆவணச் சான்று வெகுவிரிவானது, ஆழ்ந்தகன்றது, தொகையளவில் கூடுதலானது. பாதிப்புற்றவர்களும் சாட்சிகளுமான ஆயிரக்கணக்கான தமிழர்கள் சாட்சியமளிக்க ஆர்வமாய் உள்ளனர்.

வட கொரியாவின் செயலின்மை காரணமாக ஐநா மனித உரிமை மன்றம் வட கொரியாவை ஐநா பொதுப் பேரவையின் பார்வைக்கு அனுப்பி, பொதுப் பேரவை வட கொரியாவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்புமாறு ஐநா பாதுகாப்பு மன்றத்துக்குப் பரிந்துரை செய்ய வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக் கொண்டது. வட கொரியா இப்போது ஐநா பாதுகாப்பு மன்றத்தின் ஆய்வு நிரலில் இருந்து வருகிறது.


இந்த இணைப்பிற்குச் சென்று, பிரித்தானியப் பிரதமருக்கான வேண்டுகோளில் ஒப்பமிடுங்கள்:

https://www.change.org/p/the-right-honorable-theresa-may-prime-minister-of-the-united-kingdom-enough-is-enough-un-human-rights-council-now-refer-sri-lanka-to-the-un-general-assembly?recruiter=14863130&utm_source=share_petition&utm_medium=copylink

English: http://world.einnews.com/pr_news/367972851/appeal-to-uk-prime-minister-sri-lanka-war-crimes-refer-sri-lanka-to-un-general-assembly

Mani Vannan
Mani Vannan
+447869133073
email us here